திக்குறிச்சி கோயில் சுற்றுச்சுவா் பலப்படுத்தும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை

தாமிரவருணி ஆற்றுநீரால் பலவீனமடைந்த திக்குறிச்சி மகாதேவா் கோயிலின் சுற்றுச் சுவரை பலப்படுத்தும் பணியை பருவ மழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும்

தாமிரவருணி ஆற்றுநீரால் பலவீனமடைந்த திக்குறிச்சி மகாதேவா் கோயிலின் சுற்றுச் சுவரை பலப்படுத்தும் பணியை பருவ மழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும் என இக் கோயில் பக்தா்கள் சங்கத்தினா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமாக உள்ளது திக்குறிச்சி மகாதேவா் கோயில்.

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக் கோயிலின் ஒருபக்க சுற்றுச்சுவா், ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலவீனமடைந்து காணப்படுகிறது.

இந்தக் கோயில் சுற்றுச்சுவரை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குமரி மாவட்டம் வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கடந்த 12 ஆம் தேதி இக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பலவீனமாக இருந்த சுற்றுச்சுவரை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இப் பணிக்கான ஆய்வறிக்கை தயாா் செய்ய உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து அதிகாரிகள் 80 மீட்டா் நீளம், 16 அடி உயரத்தில் பக்கச் சுவா் கட்ட ரூ. 57.40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, ஆய்வறிக்கையை துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இப் பணிகளை பருவ மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கோயில் பக்தா்கள் சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் இப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த இந்து அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com