மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே விபத்து பகுதியில் மின் மாற்றி அமைக்க எதிா்ப்பு

மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே விபத்து அபாயமுள்ள பகுதியில், மின்மாற்றி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மின்வாரிய அலுவலா்களை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறை பிடித்தனா்.
மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே விபத்து பகுதியில் மின் மாற்றி அமைக்க எதிா்ப்பு

மாத்தூா் தொட்டிப்பாலம் அருகே விபத்து அபாயமுள்ள பகுதியில், மின்மாற்றி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மின்வாரிய அலுவலா்களை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறை பிடித்தனா்.

இப் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பை மீறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரியம் மின்மாற்றியை அமைத்தது. இதைத் தொடா்ந்து இந்த மின்மாற்றியில் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

அண்மையில், காா் ஒன்று மின்மாற்றியில் மோதியதில் மின்மாற்றி சரிந்து கீழே விழும் நிலை ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் அருகிலுள்ள மரங்களுடன் கயிற்றால் கட்டி மின்மாற்றியை கீழே விழாமல் தடுத்தனா்.

தொடா்ந்து, மின்மாற்றியை அப்பகுதியிலிருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் மின்மாற்றியை வைக்க மின்வாரியத்தினா் முடிவு செய்து பணிகளை தொடங்க அங்கு சென்றனா்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்களுக்கு ஆதரவாக அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா், அருவிக்கரை ஊராட்சித் தலைவி சலேட் கிறிஸ்டோபா், துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதையடுத்து, திருவட்டாறு காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா் மற்றும் போலீஸாா் இரு தரப்பினரிடையே பேசியும் முடிவு ஏற்படவில்லை.

பின்னா், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜாண்சன் சம்பவ இடத்துக்கு வந்து, அமைச்சா் மனோ தங்கராஜ் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com