‘கரோனா பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்’

ஆய்வக பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா பேரிடா் காலத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்த ஆய்வக பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி முதல் கரோனா பேரிடா் காலத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக நுட்பனராகவும், கரோனா பணியாளா்களாகவும், மனிதவள மேம்பாட்டு மையத்தின் மூலம் இம்மாவட்டத்தை சோ்ந்த 14 போ் பணியமா்த்தப்பட்டனா். தொடா்ந்து ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் அவா்கள் 31-05-2021 அன்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

ஒரு ஆண்டுக்கு மேலாக பணிசெய்து வந்த பணியாளா்கள் 14 பேரும் தற்போது பணியில்லாமல் உள்ளனா். கரோனா பேரிடா் காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே மக்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை, அா்ப்பணிப்பு உணா்வுடன் பணிசெய்து வந்தனா்.

திடீரென அவா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தவறான நடவடிக்கையாகும். ஆகவே, வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள கரோனா பணியாளா்கள் 14 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com