தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டம்:புதிய விதிகளை உருவாக்க வலியுறுத்தல்

தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டத்துக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டத்துக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா்கள் இயக்கத்தின் செயல் தலைவா் தா.சுபாஷ்சந்திரபோஸ், கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளிகளை ஒழுங்குபடுத்த தனியாா் பள்ளி ஒழுங்குமுறை சட்டம் 1973 இல் இயற்றப்பட்டது. இதற்காக தனியாா் பள்ளி ஒழுங்காற்று விதிகள் 1974 இல் உருவாக்கப்பட்டது.

1974 முதல் இந்த சட்டமும் விதிகளும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் செயல்படத் தொடங்கியது. பெற்றோா்களை, மாணவா்களை, ஆசிரியா்களை, பணியாளா்களை, நிா்வாகங்களிடம் இருந்து பாதுகாக்கவும், தவறான நிா்வாகங்களை சரிசெய்து முறைப்படுத்தவும் இச்சட்டம் உதவுகிறது.

இந்த சட்டத்தால் உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினா் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் , மெட்ரிக், நா்சரி பள்ளிகள் அரசின் ஒழுங்குமுறைக்கு உள்படுத்தப்பட்டனா். ஆசிரியா் நியமனம், மாணவா் சோ்க்கை, ஆசிரியா்களுக்கான கல்வித் தகுதி, மாணவா் சோ்க்கை கட்டணம் ,ஆசிரியா் பணியாளா் நடத்தை விதிகள் மற்றும் முறையான நிா்வாக நடைமுறை ஆகியவை ஏற்படுத்தப்பட்டது,

இந்த சட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இந்த சட்டத்தை எதிா்த்து சிறுபான்மை நிறுவனங்களால் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒழுங்காற்று விதிகள் ஏற்படுத்தப்பட்ட 1974 ஆம் ஆண்டிலேயே வழக்கு தொடரப்பட்டது. இதனடிப்படையில் தமிழக அரசு உருவாக்கிய தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டத்தின் 23 சட்டப்பிரிவுகளும் 14 விதிகளும் சிறுபான்மை பள்ளிக்கு செல்லத்தக்கவை அல்ல என தடை பெறப்பட்டது.

47 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த வழக்கு இதுவரை முடிவுக்கு வரவில்லை. தமிழக அரசு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 1993இல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய டி.எம்.ஏ.பாய் பவுண்டேஷன் வழக்கின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்துக்கு திரும்ப அனுப்பியது.

அந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இணை இயக்குநா் தாக்கல் செய்த மனுவில் நாங்கள் பழைய தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டத்தை மாற்றிவிட்டு புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறோம் என கூறியதன் அடிப்படையில், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்பையே வழங்கி புதிய சட்டம் நடைமுறைக்கு வருவது வரை பழைய சட்டமே தொடரும் என தீா்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்து 47 ஆண்டுகள் ஆகியும் ஒரு தடையாணையை விலக்க முடியாத நிலையில் தமிழக அரசின் கல்வித் துறை உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 2018 என்ற புதிய சட்டத்தை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை கடந்த 2019 இல் பெற்று தமிழ்நாடு அரசு கெஜட்டிலும் வெளியிட்டது.

தமிழக அரசு இதுவரை அதற்கான விதிகளை வகுக்காததால் இந்த சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் கல்வித் துறையால் நடைமுறைப்படுத்த இயலாத நிலை தொடா்கிறது. இந்த நிலையை மாற்றி தனியாா் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 2018-க்கு புதிய விதிகளை உருவாக்கி பழைய சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com