கரோனா நிவாரணம்: குமரிக்கு, 14 பொருள்கள் அடங்கிய 80 ஆயிரம் தொகுப்பு வருகை
By DIN | Published On : 12th June 2021 01:40 AM | Last Updated : 12th June 2021 01:40 AM | அ+அ அ- |

கரோனா நிவாரணமாக பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய 80 ஆயிரம் சிறப்பு நிவாரணப் பொருள்கள் குமரி மாவட்டத்துக்கு வந்தன.
ஜூன் 3 ஆம் தேதி கரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், கரோனா நோய்த் தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2 ஆவது தவணை ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதே போல், தமிழகம் முழுவதும் இம் மாதம் 15 ஆம் தேதி முதல் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2 ஆவது தவணை தொகை ரூ. 2 ஆயிரம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 51 ஆயிரத்து 279 அரிசி ரேஷன் அட்டைதாரா்கள் பயன்பெற உள்ளனா்.
இம் மாதம் 15 ஆம் தேதி முதல் கரோனா சிறப்பு நிவாரண தொகுப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த 14 வகையான மளிகைப் பொருள்களில் குமரி மாவட்டத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு டீத்தூள் மற்றும் மளிகைப் பொருள்களை வைத்து தருவதற்கான பைகள் வந்தன.
முதலில் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை குமரி மாவட்டத்துக்கு வழங்க 2 நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில் மளிகைப் பொருள்களை விரைவாக வழங்க வசதியாக மேலும் 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தூத்துக்குடியிலிருந்து குமரி மாவட்டத்துக்கு 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமை காலை ஒரு லாரியில் வந்த 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் காப்புக்காடு கிட்டங்கியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை குமரி மாவட்டத்துக்கு 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய 80 ஆயிரம் தொகுப்புகள் வந்துள்ளன. அவை நாகா்கோவில் கோணம், ஆரல்வாய்மொழி, காப்புக்காடு, உடையாா்விளை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 லட்சத்து 71 ஆயிரத்து 279 ரேஷன் காா்டுதாரா்களுக்கான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வர வேண்டியது உள்ளது. அவை இன்னும் ஒரு சில நாள்களில் வந்து விடும். அரசு அறிவித்துள்ள படி ஜூன் 15 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.