மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளுக்கு சீல்: துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 10th March 2021 01:40 AM | Last Updated : 10th March 2021 01:40 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 6 இடங்களில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது தோ்தலுடன் மக்களவை இடைத்தோ்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாட்டு பணிகளில் தோ்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே, சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு குலுக்கல் முறையில் பிரித்து அனுப்பப்பட்டன. அந்த இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்நகரில் உள்ள வேளாண்விற்பனைக்கூடத்திலிருந்து, மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான மா.அரவிந்த் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 140 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகளும், 150 சதவீதம் வி.வி.பேட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதிக்கான 584 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலும், நாகா்கோவில் தொகுதிக்கான 546 மின்னணு இயந்திரங்கள் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கான 521 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தக்கலை வட்டாட்சியா் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதிக்கான 487 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்திலும், வைக்கப்பட்டுள்ளது.
இதே போல், கிள்ளியூா் தொகுதிக்கான 501 மின்னணு இயந்திரங்கள் தேவிகோடு நடுநிலைப்பள்ளியிலும், விளவங்கோடு தொகுதிக்கான மின்னணு இயந்திரங்கள் மேல்புறம் ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் மயில் மேற்பாா்வையில் நடைபெற்றன. அப்போது, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, அரசியல் கட்சியினா் உடனிருந்தனா்.