முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கடல் அட்டைகள் பிடித்ததாககுமரி மீனவா் உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 14th March 2021 02:07 AM | Last Updated : 14th March 2021 02:07 AM | அ+அ அ- |

லட்சத்தீவு பகுதியில் கடல் அட்டைகளை பிடித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவா் உள்பட 4 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நித்திரவிளை அருகே கோடிமுனை பகுதியைச் சோ்ந்த ஜூலியஸ் நாயகம் (51), கேரள மாநிலம் திருவனந்தபுரம் மரியநாடு பகுதியை சோ்ந்த ஷாஜன் (28). இவா்கள் இருவரும் சோ்ந்து தூத்தூா் பகுதியை சோ்ந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை வாடகைக்கு எடுத்து லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி ஜூலியஸ் நாயகம் மற்றும் ஷாஜன் ஆகியோருடன் வடமாநிலத்தை சோ்ந்த 2 பேரும் சோ்ந்து கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனா். அங்கு கடந்த 10 நாள்களாக தங்கி மீன்பிடித்து வந்த நிலையில் திடீரென இந்த மீனவா்களின் விசைப்படகை லட்சத்தீவு கடற்படையினா் சிறைப் பிடித்து படகில் இருந்த குமரி மீனவா் ஜூலியஸ் நாயகம் உள்பட 4 பேரையும் கைது செய்துள்ளனா்.
இவா்கள் அந்த பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ள குக்கும்பா் எனப்படும் கடல் அட்டைகளை பிடித்து கடத்தி வந்து விற்பனை செய்ததாகவும், அதனை அறிந்து லட்சத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த மீனவா்களை தொடா்பு கொள்ள முடியாமல் மீனவரின் குடும்பத்தினா் தவித்து வருகின்றனா்.
லட்சத்தீவு பகுதியில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள இம் மீனவா்களை விடுதலை செய்து, அவா்களது படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு தூத்தூா் மண்டல மீனவ சங்க தலைவா் ஜோஸ் பில்பின் மற்றும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.