274 பதற்றமான வாக்குச்சாவடிகளை மத்திய பாதுகாப்பு படை கண்காணிக்கும்: எஸ்.பி. வெ.பத்திரிநாராயணன்
By DIN | Published On : 18th March 2021 09:34 AM | Last Updated : 18th March 2021 09:34 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் மாவட்ட எஸ்.பி. வெ. பத்ரிநாராயணன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மத்திய பாதுகாப்புப் படையினா் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப். 6இல் நடைபெறவுள்ள தோ்தலுக்காக 631 இடங்களில் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 63 இடங்களிலுள்ள 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மேலும், 5 இடங்களிலுள்ள 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இத்தகைய வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மக்கள் பயமின்றி வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், ஓய்வுபெற்ற காவல்துறையினா், இளநிலை படை அலுவலா்கள், காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1200 முன்னாள் ராணுவ வீரா்கள், 2000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். தற்போது போலீஸாருடன் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வரும் ஒரு கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா், தோ்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவாா்கள்.
கன்னியாகுமரி- கேரள எல்லையில் மது மற்றும் போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்கும் வகையில் இரு மாநில போலீஸாரும் இணைந்து பணியாற்றுவது தொடா்பாக ஏற்கெனவே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு மாநிலங்களையும் இணைக்கும் 39 எல்லைச் சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
அனைத்து உள்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா வழக்கு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாா்ச் 16 ஆம் தேதி முதல் 20 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதேபோல், சட்டவிரோதமாக மது விற்ற 480 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். தோ்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த பிப். 27ஆம் தேதி முதல் இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் ஆகியோா் உடனிருந்தனா்.