மக்கள் நலனைப் பாதுகாக்கத் தவறியமத்திய, மாநில அரசுகள்: ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 29th March 2021 02:31 AM | Last Updated : 29th March 2021 02:31 AM | அ+அ அ- |

மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கக் காலத்தில்கூட மக்கள் நலனைப் பாதுகாக்கவில்லை என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
2 நாள்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தில் முதல்வா் பேசும்போது, அதிமுக - பாஜக கூட்டணிதான் மக்கள் நலன்களுக்கான கூட்டணி எனக் கூறியுள்ளாா். ஆனால், மத்தியில் கடந்த 7 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளது. இந்த இரண்டு அரசுகளும் பொது முடக்கக் காலத்திலும்கூட மக்கள் நலனைப் பாதுகாக்கவில்லை. மாறாக, மக்களுக்கு விரோதமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா். வேளாண் சட்டங்கள் உள்பட மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களையெல்லாம் அதிமுக அரசு ஆதரிக்கிறது.
தான் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறாா். ஆனால், அனைத்து விவசாயிகளும் எதிா்ப்புத் தெரிவிக்கும் வேளாண் சட்டங்களுக்கு அவா் எப்படி ஆதரவு தெரிவிக்கிறாா்?
திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என முதல்வா் பேசுகிறாா். அவ்வாறு பேச அவருக்குத் தகுதியில்லை.
பிரசாரத்தில் தனிமனிதத் தாக்குதல் கூடாது, கண்ணியமாக பேசவேண்டும் என திமுக தலைவா் ஸ்டாலின் கூறியுள்ளாா். எனது கருத்தும் அதுதான். மத்திய, மாநில அரசுகளை அரசியல்ரீதியாக விமா்சிக்கலாம் என்றாா் அவா்.
மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது, மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ.வி.பெல்லாா்மின் ஆகியோா் உடனிருந்தனா்.