குமரியில் ஒரே நாளில் 54 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாதிப்பு பெருமளவு இருந்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பொது முடக்கத்தில் பெருமளவு தளா்வுகள் அதிகரிக்கப்பட்ட பின்னும், தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையிலும் கரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த கரோனா பாதிப்பு, கடந்த சில நாள்களாக இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. அதிலும், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், ஒரே நாளில் 54 போ் கரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளது கண்டறியப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதுமே இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களில் சுவாமி தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

வழிபாடுகளுக்கு கட்டுப்பாடு:

இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அண்மையில் விடுத்த சுற்றறிக்கையில், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அா்ச்சனை, வழிபாடுகள் நடத்தவோ, பிரசாதம், தீா்த்தம் கொடுக்கவோக் கூடாது. திருவிழாக்கள் மற்றும் சிறப்புப் பூஜைகள் ஏதேனும் நடத்த வேண்டிய நிா்பந்தம் இருந்தால் மாவட்ட நிா்வாகத்திடம் முன் அனுமதி பெற்று விழா நடத்த வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை நன்றாக கழுவிய பின்னரே பக்தா்களை உள்ளே அனுமதிக்க வேண்டும். 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், கா்ப்பிணிகள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை கயில் நிா்வாகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் கலக்கம்: தோ்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தங்கள் பிரசாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு ஏதேனும் அறிவிப்பை வெளியிடுமோ என்று அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.

எனினும், கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்குமாறு கட்சி தலைவா்கள் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு பெற்றோா் மத்தியில் எழுந்துள்ளது.

தடுப்பூசி அவசியம்: இதனிடையே, மக்கள் தேவையற்ற பயணங்களை தவிா்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, உடல் சோா்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கேரளம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து வருவோா் தங்களை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

17,054 போ் மீட்பு: இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,507 ஆகவும், மேலும் 18 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,054 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது, 190 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com