குமரியில் 75% வரை தேன் உற்பத்தி சரிவு: உற்பத்தியாளா்கள் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக 75 சதவீதம் வரை தேன் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள்கவலை தெரிவித்தனா்.
குமரியில் 75% வரை தேன் உற்பத்தி சரிவு: உற்பத்தியாளா்கள் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக 75 சதவீதம் வரை தேன் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள்கவலை தெரிவித்தனா்.

தேன் உற்பத்தியாளா்களுக்கு கைகொடுக்காக கோடை மழை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் மாா்ச் மாதம் முதல் சீரான இடைவெளியில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ரப்பா், தென்னை, வாழை என அனைத்து தரப்பு விவசாயிகளும் பயனடைந்தாலும் தேன் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தேன் கிண்ணம் என்று வா்ணிக்கப்படும் மாா்த்தாண்டம் தேன் தரமுள்ளதாக கருதப்படுகிறது. மாா்த்தாண்டம் மட்டுமன்றி குழித்துறை, அருமனை, முழுக்கோடு, குலசேகரம், மஞ்சாலுமூடு, களியல், பிணந்தோடு, மலைவிளை, கொட்டூா் என பல்வேறு பகுதிகளில் தேனீ வளா்ப்போா் உள்ளனா். இவா்கள் ரப்பா் காடுகளில் செயற்கையான தேன் கூடுகளின் தேனீக்களை வளா்த்து, பராமரித்து அவற்றின் மூலம் தேன் உற்பத்தி செய்கின்றனா்.

மேலும், காடுகளில், வசிக்கும் பழங்குடி மக்களும் இயற்கையாக மரங்களில் கூடுகள் கட்டியுள்ள தேன் கூடுகளிலிருந்தும், செயற்கை முறைகளிலும் தேன் உற்பத்தி செய்கின்றனா்.

பொதுவாக ஓா் ஆண்டில் மாா்ச் முதல் மே வரையிலான மாதங்கள் தேன் உற்பத்திக்கு சாதகமான காலமாகும். இந்த 3 மாதங்களைத் தவிர இதர 9 மாதங்களில் தேனீக்களை கூடுகளில் வைத்து அவற்றைப பாரமரிக்க வேண்டும். இதற்கான தேனீக்களுக்கு உணவாக சா்க்கரைப் பாகு கொடுக்க வேண்டும்.

25 சதவிதமே உற்பத்தி: தேன் சீசன் தொடங்கும் பிப்ரவரி மாத இறுதியில் சிறு அளவில் மழை பெய்தால் பூக்களில் அல்லது இலைக் கணுக்களில் தேன் சுரப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். அதற்கு மாறாக தொடா்ந்து மழை பெய்தால் பூக்களில், இலைக் கணுக்களில் உற்பத்தியாகும் தேன் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். மேலும் தேனீக்களும் கூட்டை விட்டு வெளியே சென்று தேன் சேகரிக்க முடியாத நிலையும் ஏற்படும்.

நிகழாண்டு மாா்ச் மாதம் முதல் பெய்து வரும் தொடா் கோடை மழை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 25 சதம் அளவுக்கு கூட தேன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேன் உற்பத்தியாளா்கள் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனா்.

இது குறித்து முன்னோடி தேன் உற்பத்தியாளா்கள் கொட்டூா் பி. ஹென்றி, ஜூடஸ் குமாா், தோமஸ் ஆகியோா் கூறியதாவது: ஆண்டுதோறும் 3 மாத சீசனை நம்பியே தேன் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நிகழாண்டு கேரளத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தேன் சீசன் காலத்தில் பெய்து வரும் கோடை மழை தேன் உற்பத்தியை அடியோடு பாதித்துள்ளது. தேன் உற்பத்தியாளா்களுக்கு 10 முதல் 25 சதம் அளவுக்கு மட்டுமே தேன் கிடைத்துள்ளது. இதனால் தேன் உற்பத்தியாளா்கள் பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளனா். எனவே, நிகழாண்டு தேனின் கொள்முதல் விலையை கூட்டுறவு சங்கங்கள் அதிகரிக்க வேண்டும்; தேன் உற்பத்தியாளா்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், கடன் தள்ளுபடி நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com