குமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா
By DIN | Published On : 16th May 2021 11:38 PM | Last Updated : 16th May 2021 11:38 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி பகவதியம்மன்.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மே 16) தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக வைகாசித் திருவிழா நடைபெறவில்லை. ஆனால், பொதுமுடக்கம் தளா்த்தப்பட்ட பின்னா் புரட்டாசி நவராத்திரி திருவிழா நடைபெற்றது.
நிகழாண்டும் கரோனா பொது முடக்கம் காரணமாக கோயில்களில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வழக்கமாக நடைபெறும் கொடியேற்றம், வாகன பவனி, தேரோட்டம் ஆகியன நடைபெறாது. மேலும், திருவிழாவை முன்னிட்டு முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆறாட்டு, தெப்பத் திருவிழாவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
16ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையிலான 10 நாள்களும் அதிகாலை 5, காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் பக்தா்கள் இன்றி நடைபெறும்.