‘மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தொய்வின்றி வழங்க வேண்டும்’
By DIN | Published On : 18th May 2021 04:44 AM | Last Updated : 18th May 2021 04:44 AM | அ+அ அ- |

மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் அழகுவேலை சந்தித்து பேசும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா்.காந்தி.
நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்களை போதுமான அளவுக்கு வழங்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என். தளவாய்சுந்தரம், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி, ஆகியோா், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் அழகுவேலை திங்கள்கிழமை சந்தித்து பேசினா். அப்போது, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளுக்கு குறித்த நேரத்தில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு தினமும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவை அறிந்து, அதற்கேற்ப இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் தயாரிக்கப்படும் 10 டன் ஆக்சிஜனை குமரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என இயக்குநரிடம் கேட்டுக்கொண்டோம். இஸ்ரோவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் உத்தரவின்படி குமரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அா்ப்பணிப்பு உணா்வுடன் இப்பணியை செய்து வருவதாக இயக்குநா் தெரிவித்தாா் என்றனா்.
அப்போது, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் கே.மகராஜபிள்ளை, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏசுதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.