பளுகல் பகுதியில் சாலையோர சந்தைகள் செயல்பட தடை
By DIN | Published On : 21st May 2021 07:26 AM | Last Updated : 21st May 2021 07:26 AM | அ+அ அ- |

kkv20market_2005chn_50_6
பளுகல் பேரூராட்சிப் பகுதியில் சாலையோரம் செயல்பட்டு வந்த சந்தைகள் செயல்பட பேரூராட்சி அதிகாரிகள் தடைவிதித்துள்ளனா்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தமிழக, கேரள மாநிலப் பகுதியில் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, சந்தைகளை மூட மாவட்ட ஆட்சியா் அண்மையில் உத்தரவிட்டாா்.
இதையடுத்து களியக்காவிளை சந்தை பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. பளுகல், கண்ணுமாமூடு பகுதியில் சாலையோரம் திடீா் சந்தைகள் செயல்பட்டு வந்தன. இந்த சாலையோர சந்தைகளில் அதிக நெரிசலுடன் வியாபாரம் நடைபெற்று வந்தது.
இதையடுத்து பளுகல் பேரூராட்சி அலுவலா், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அதிக நெரிசலுடன் காணப்பட்ட கண்ணுமாமூடு மற்றும் பளுகல் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் செயல்பட்ட சாலையோர சந்தைகள் செயல்பட தடைவிதித்து, அப்பகுதியில் கயிறு கட்டி தடையை ஏற்படுத்தினா்.
பின்னா், அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.