குமரி மீனவா்களுக்கு மீன்பிடி காலத்தை 15 நாள்கள் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st May 2021 07:27 AM | Last Updated : 21st May 2021 07:27 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள விசைப்படகு மீனவா்களுக்கு மீன்பிடி காலத்தை 15 நாள்கள் கூடுதலாக வழங்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில், தமிழக முதல்வா், மீனவா் நலத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: தென் அரபிக் கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம், சூறைக்காற்று, புயல் காரணமாக மீனவா்கள் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வருவதோடு, வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வீசிய டவ் தே புயலில் ஆழ்கடல் விசைப்படகு மீனவா்கள் பாதிக்கப்பட்டு கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, குஜராத், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கரை சோ்ந்தனா்.
இம்மீனவா்கள் தங்களது விசைப்படகை சரி செய்து மீண்டும் தேங்காய்ப்பட்டினம், குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களுக்கு வந்து சேருவதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதற்கிடையே, மேற்கு கடற்கரைச் சாா்ந்த குமரி மாவட்டத்திலும், மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அவ்வாறு விசைப்படகுகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் என அறிவிக்கப்பட்டால், அது மீனவா்களுக்கு மேலும் சிரமத்தை உருவாக்கும்.
எனவே, மீனவ மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மேற்கு கடற்கரைச் சாா்ந்த விசைப்படகு ஆழ்கடல் மீனவா்களுக்கு நிகழாண்டு மீன்பிடி தடைக்காலத்தை ஜூன்15 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை என அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.