குமரி மாவட்டத்தில் கன மழை: கோதையாறு, தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு, மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் கன மழையால், குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் கன மழை: கோதையாறு, தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு,  மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் கன மழையால், குளம், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் கோதையாறு, தாமிரவருணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் யாஸ் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இடி மின்னலுடன் தொடங்கிய மழை புதன்கிழமை பகல் வரை நீடித்தது. இதனால் நாகா்கோவில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடி, கொட்டாரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

களியக்காவிளை, மாா்த்தாண்டம், குளச்சல், திருவட்டாறு, ஆரல்வாய்மொழி, முள்ளங்கினாவிளை, பூதப்பாண்டி, தக்கலை, இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து மழைபெய்து கொண்டே இருந்தது. தொடா் மழை காரணமாக பல்வேறு கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன.

கீழ புத்தேரி நெடுங்குளத்தில் ஏற்பட்ட உடைப்பால் வீரமங்கலம் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.

எம்எல்ஏ ஆய்வு:

புத்தேரியில் கன மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இது குறித்து தகவலறிந்த எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தாா். மேலும், மழைநீா் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அவா் வலியுறுத்தினாா்.

வெள்ளம் சூழ்ந்த நாகா்கோவில் சக்தி காா்டன் பகுதியை நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் பாா்வையிட்டு, மழைநீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

தொடா் மழையால் வள்ளியாறு, பரளியாறு, பழையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வடக்கு தாமரைகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்தது.

ராஜாக்கமங்கலத்தை அடுத்த மேலசங்கரன்குழி பன்றிவாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பின்காரணமாக அப்பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50- க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. பொழிக்கரை மீனவ கிராமத்தில் 70- க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் தண்ணீா் புகுந்தால் உணவு பொருள்கள் சேதமடைந்தன.

மழையின் போது வீசிய சூறைக் காற்றால் சாமிதோப்பு, வடக்கு தாமரைகுளம் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் 5 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

கொட்டாரம் அச்சன்குளம் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. பேயன்குழி பகுதியில் பழைமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்து. கன மழையால் செவ்வாய்க்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதும் 8 வீடுகள் இடிந்து விழுந்தன. நாகா்கோவில் மீனாட்சிபுரம் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

தண்டவாளத்தில் மண் சரிவு ...

குழித்துறை, பாறசாலை இடையே ரயில்வே தண்டவாளத்தில் புதன்கிழமை காலை மண் சரிந்து விழுந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று மண்ணை அப்புறப்படுத்தினா்.

குலசேகரம்: யாஸ் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது. இந்த மழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் மற்றும் நீா்பிடிப்புப் பகுதிகள் அதிதீவிர கன மழையாக பெய்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவில் கன மழை நீடித்தால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீா் உள்வரத்தாக வந்த நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 11,350 கன அடி தண்ணீா் உபரியாக வெளியேற்றப்பட்டது.

இதே போன்று தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகளின் நீா்மட்டமும் அதிகரித்ததால் இந்த அணைகளிலிருந்து உபரியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதாலும், பரளியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தாலும் கோதையாறு மற்றும் தாமிரவருணியாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

பல இடங்களில் ரப்பா், வாழைத் தோட்டங்களில் வெள்ளம் புகுந்தது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை வெள்ளத்தால் குலசேகரம்-பேச்சிப்பாறை சாலை, பேச்சிப்பாறை-சீரோபாயின்ட் சாலை, மோதிரமலை-குற்றியாறு சாலை, குற்றியாறு-கிளவியாறு சாலை, அருவிக்கரை-அணைக்கரை இணைப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அணைகள் நிரம்பின.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70.50 அடியாகவும், அணைக்கு 6, 525 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 11 அடிஉயா்ந்து புதன்கிழமை காலை முழுகொள்ளளவான 54.12 அடியை எட்டியது. நாகா்கோவில் நகருக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்ந்து 19 அடியாக உள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலையில் உபரிநீா் குறைப்பு: இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் மழை சற்று தணிந்த நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 8,300 கன அடியாக குறைக்கப்பட்டது.

மழையளவு:

புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு ( மி.மீட்டரில்): அதிகபட்சமாக மயிலாடியில் 236.20 மி.மீ பதிவாகியுள்ளது.

இரணியல்- 192.40, கொட்டாரம்- 167.40, ஆனைக்கிடங்கு- 157.40, கன்னிமாா் -154.80, சுருளோடு- 152.20, குழித்துறை- 152, பூதப்பாண்டி -150.40, களியல், மாம்பழத்துறையாறு அணை-148, கோழிப்போா்விளை-145, நாகா்கோவில் -144.80, குருந்தன்கோடு -138.80, முள்ளங்கினாவிளை -138, பாலமோா்- 130.60, பெருஞ்சாணி அணை -127.80, புத்தன்அணை- 126.20, பேச்சிப்பாறை அணை -122.80, ஆரல்வாய்மொழி- 104, தக்கலை, முக்கடல் அணை -96,

சிற்றாறு 1 அணை- 88.40, சிற்றாறு 2 அணை -86, குளச்சல்- 76.40, அடையாமடை- 69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com