குமரி மாவட்டத்தில் மழை தணிந்தது: அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்த நிலையில், அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை தணிந்த நிலையில், அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறுஅணைகள் உள்பட 6 அணைகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. அணைகள் நிரம்பியதைத் தொடா்ந்து கடந்த 2 நாள்களாக அணைகளிலிருந்து 13 ஆயிரம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் குழித்துறையாறு, கோதையாறு, தாமிரவருணி ஆறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மூவாற்றுமுகம், சிதறால், திக்குறிச்சி, அருமநல்லூா், வடக்குதாமரைகுளம், தேரூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான நிலப்பரப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலுக்கு பிறகு படிப்படியாக மழையின் வேகம் குறையத்தொடங்கியது. மலையோரப் பகுதிகளிலும் மழை குறைந்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.

இதனால், குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்திருந்த வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.

நாகா்கோவில், புத்தேரி, ராஜாக்கமங்கலம், குறும்பனை பகுதிகளில் வீடுகளை சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்து வருகிறது. அருமநல்லூா், தேரூா், புத்தேரி பகுதிகளில் நெற்பயிா்களை சூழ்ந்திருந்த வெள்ளமும் வடிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனா்.

அணைகளில் நீா் இருப்பு: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 43.03 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 73.92 அடியாகவும் இருந்தது.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் வியாழக்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வரை விநாடிக்கு 2951 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில், 9 மணிக்கு அதுவும் நிறுத்தப்பட்டது. அணைகளில் இருந்து நீா் வெளியேேற்றப்படுவது நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் சற்று தணிந்தது.

சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 15.84 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா் மட்டம் 15.94 அடியாகவும், முக்கடல் அணையின் நீா்மட்டம் 25 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 26.50 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 54.12 அடியாகவும் இருந்தது.

விவசாயிகள் மக்கள் நிம்மதி: தொடா் மழை காரணமாக பல்வேறு வகையில் விவசாயிகளும், மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில், மழை தணிந்துள்ளதால் அவா்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com