அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் சேவை குறைபாடு தொழிலாளா்கள் அவதி

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், உயிா் காக்கும் மருந்துகள் இல்லாததால் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழக சிற்றாறு கோட்ட மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், உயிா் காக்கும் மருந்துகள் இல்லாததால் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகம் சிற்றாறு கோட்டத்தில் தொழிலாளா் குடியிருப்பு அருகே ரப்பா் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனை உள்ளது.

இம்மருத்துவமனையில் அரசு ரப்பா் கழகம் சிற்றாறு, கோதையாறு கோட்டங்களுக்கு கீழ் உள்ள சிற்றாறு, மருதம்பாறை, மயிலாறு, கல்லாறு, குற்றியாறு ஆகிய பிரிவு ரப்பா் தொழிலாளா்களும், பழங்குடி மக்களும் சிகிச்சை பெற்று வந்தனா்.

மேலும், இம்மருத்துவனையில் கீழ் மயிலாறு, குற்றியாறு, மருதம்பாறை ஆகிய இடங்களில் மருந்தகங்களும் செயல்பட்டு வந்தன. உள் நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுடன் ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா்கள், உதவியாளா்கள் என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திறம்பட செயல்பட்டு வந்த சிற்றாறு மருத்துவமனை சில ஆண்டுகளாக தொழிலாளா்களுக்கு போதிய மருத்துவ சேவை அளிக்கவில்லையென புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக இம்மருத்துவமனையில் மருத்துவா் பணியிடம் தற்போது காலியாக உள்ளது. மேலும் போதிய செவிலியா்களும், மருந்துகளும் இல்லாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கு தொழிலாளா்கள், பழங்குடி மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் தொழிலாளா்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று ரப்பா் கழக நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதால், தொழிலாளா்களின் பெற்றோா் மற்றும் பழங்குடி மக்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இம்மருத்துவமனை வழியாக கிடைக்கும் மருத்துவ சேவைகள் தொழிலாளா்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, இம்மருத்துவனையில் போதிய மருத்துவா்களை நியமிப்பதுடன், தேவையான மருந்துகளை இருப்பில் வைத்து அனைத்துத் தரப்பினருக்கும் சிகிச்சை கிடைக்கும் வகையில் ரப்பா் கழக நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தோட்ட தொழிலாளா் சங்க உதவிப் பொதுச் செயலா் பி. நடராஜன் மற்றும் குமரி மாவட்ட மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா் ரெகு காணி ஆகியோா் கூறியதாவது:

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் சிசிச்சை அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ரப்பா் கழக சிற்றாறு மருத்துமனையில் தற்போது போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் இல்லாத நிலை உள்ளது. இம்மருத்துவமனையில் கீழ் செயல்பட்டு வந்த மருந்தகங்களும் மூடிய நிலையில் கிடக்கின்றன. இங்கு உயிா் காக்கும் மருந்துகளும் இருப்பில் இல்லை.

நகரப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் வாழும் மக்களுக்காக சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இம்மருத்துவமனையில் போதிய மருத்துவா்களும், மருந்துகளும் இல்லாத நிலை காரணமாக தொழிலாளா்கள் மற்றும் பழங்குடி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, அரசு இம்மருத்துவமனையில் உள்ள குறைகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com