நாகா்கோவிலில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது
By DIN | Published On : 16th November 2021 01:41 AM | Last Updated : 16th November 2021 01:41 AM | அ+அ அ- |

நாகா்கோவிலில் மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில், வடசேரி அருகேயுள்ள புத்தேரி ஆட்டுப்பட்டி காலனி பகுதியை சோ்ந்தவா் தங்கவேல் (67). இவரது மனைவி வள்ளியம்மாள். தங்கவேல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். தங்கவேலின் மனைவி வள்ளியம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா்.
இவா்களது மகன் கோலப்பன் (34). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா். இதனால் தங்கவேலுவும், மகன் கோலப்பனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். கோலப்பன் அடிக்கடி மதுஅருந்தி விட்டு வந்து தந்தையிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கோலப்பன் மீன்கொண்டு வந்து , சமைத்து தருமாறு தந்தை தங்கவேலிடம் கூறினாராம். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த கோலப்பன், தந்தையை பிடித்து கீழே தள்ளினாராம். அதையடுத்து, தங்கவேலுவும் மகனை பிடித்து கீழே தள்ளினாா். இதில் கோலப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கோலப்பனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா். இதுகுறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கவேலுவை கைது செய்தனா்.