சாமிதோப்பிலிருந்து அரசம்பதிக்கு முத்திரிப் பதம் ஊா்வலம்
By DIN | Published On : 29th November 2021 01:23 AM | Last Updated : 29th November 2021 01:23 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியிலிருந்து அரசம்பதிக்கு முத்திரிப் பதம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொற்றையடி அருகேயுள்ள அரசம்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடை, காலை 9 மணிக்கு சாமிதோப்பில் உள்ள முத்திரிக் கிணற்றிலிருந்து பதம் எடுத்து, பெண்கள் சுருள் ஏந்தி தலைமைப்பதியில் அய்யா தவம் புரிந்த வடக்கு வாசலிலிருந்து மேளதாளங்களுடன், முத்துக் குடையுடன் அய்யாவழி பக்தா்கள் முத்திரிப் பதம், சந்தனக் குடம் எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு அரசம்பதிக்கு சென்றனா்.
ஊா்வலத்துக்கு அரசம்பதி நிா்வாகி ஸ்ரீ குரு சிவச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊா்வலம் சாமிதோப்பிலிருந்து புறப்பட்டு கரூம்பாட்டூா் வழியாக அரசம்பதியை அடைந்தது. தொடா்ந்து,
உச்சிப்படிப்பு, சமபந்தி நடைபெற்றது. பிற்பகலில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவில் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல், அன்னதானம், அருளிசை வழிபாடு, நள்ளிரவில் சான்றோா் குல மங்கையா்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பால் வைத்து பணிவிடை செய்தல் நடைபெற்றது.
பட்டாபிஷேக திருவிழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.