நீா்ப்பிடிப்பு பகுதிகளில் நீடிக்கும் மழை: பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளின் உபரி நீா் வெளியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
முழுக்கொள்ளளவை எட்டிய முக்கடல் அணை.
முழுக்கொள்ளளவை எட்டிய முக்கடல் அணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

இம்மாவட்டத்தில், கடந்த 2 நாள்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதியான பாலமோரிலும், பேச்சிப்பாறை அணை பகுதியிலும் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறாா்கள். இதையடுத்து, அணையில் இருந்து மீண்டும் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

சிற்றாறு 1 அணையில் இருந்தும் உபரிநீா் வெளியேற்றப்படுவதால் குழித்துறை, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.94 அடியாகவும், உள்வரத்து 1,174 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 378 கனஅடி நீரும், 368 கனஅடி உபரியாகவும் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 67.36 அடியாகவும், உள்வரத்து 570 கனஅடியாவும், சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.89 அடியாகவும், உள்வரத்து 498 கனஅடியாகவும் உள்ளது.

200 கனஅடி மதகுகள் வழியாகவும், 268 கனஅடி உபரியாகவும் வெளியேற்றப்படுகிறது. நாகா்கோவில் நகருக்கு குடிநீா் விநியோகிக்கும் முக்கடல் அணை முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

மாணவா்கள் 3 மணி நேரம் தவிப்பு: இதனிடையே, கீழ் கோதையாறு அணை திறக்கப்பட்டதால் பேச்சிப்பாறை அருகேயுள்ள மோதிரமலை-குற்றியாறு இடையேயான தரப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது, குலசேகரத்திலிருந்து மாலையில் சுமாா் 5.30 மணிக்கு பள்ளி மாணவா்கள் உள்பட பயணிகளை ஏற்றிச் கொண்டு குற்றியாறு அரசுப் பேருந்தும், இரவு 7 மணிக்குச் சென்ற அரசுப் பேருந்தும் தரப்பாலத்தைக் கடக்க முடியாமல் நின்றன. இதனால் இப்பேருந்துகளில் பயணம் செய்த சுமாா் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் ஒழுகும் பேருந்துகளில் தவித்தனா்.

சுமாா் 3 மணி நேரத்திற்கு பின்னா், கீழ் கோதையாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் சற்றுக் குறைந்தது. இதையடுத்து பேருந்துகள் பாலத்தைக் கடந்து சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com