கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசாா் குறியீடு: குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சி

கிராம்புக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ள நிலையில் குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி  கிராம்புக்கு புவிசாா் குறியீடு: குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசாா் குறியீடு: குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சி

கிராம்புக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ள நிலையில் குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

உணவுப் பதாா்த்தங்களின் மணமூட்டியாகவும், ஏராளமான மருத்துவக் குணம் கொண்டதுமான கிராம்பு நறுமணப் பயிா்களின் ராணி என வா்ணிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமாா் 2500 அடிவரை உயரம் கொண்ட பகுதிகளான மாறாமலை, பாலமோா், இஞ்சிக்கடவு, ஷீபீல்டு, காரிமணி, கரும்பாறை, வேளிமலை, உள்ளிமலை, ஆறுகாணி, பத்துகாணி, கொண்டைகட்டிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் கிராம்பு பயிராகிறது.

இது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கிராம்பு பயிரிடப்படும் பரப்பில் 73 சதவீதமாகும். கிராம்பு மரங்களில் பூக்கும் பூ மொட்டுகளே கிராம்பு என வகைப்படுத்தப்படுகிறது. பூ மொட்டுகள் விரிந்து பூக்களாகி விட்டாலோ அல்லது பூக்கள் காயாகிவிட்டாலோ அவை வாசனை குறைந்து மதிப்பிழந்து விடுகின்றன.

எனவே கிராம்பு மரங்களில் பூ மொட்டுகள் உருவான குறிப்பிட்ட காலத்தில் அவற்றை அறுவடை செய்து விட வேண்டும். இதுதவிர கிராம்பு மொட்டுகளின் தண்டுகள், மரங்களிலிருந்து காய்ந்து உலரும் இலைகளும் கறிமசால் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் ஒட்டுமொத்த கிராம்பு உற்பத்தி ஆண்டொன்றுக்கு 1100 டன் என்ற நிலையில், தமிழ்நாட்டில் 1000 டன் கிராம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் குமரி மாவட்டத்தில் மட்டும் 670 முதல் 750 டன் வரை உற்பத்தியாகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை, கடலின் மூடுபனி, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையின் அளவு மற்றும் அங்கத உரச்சத்து நிறைந்த கருமண் கிராம்பு உற்பத்திக்கு சாதகமாக உள்ளன.

இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும் உற்பத்தியாகும் கிராம்புக்கு இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிராம்புக்கு பல்வேறு தனித்தன்மைகள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிராம்பு மொட்டுகளிலுள்ள வாசனை எண்ணெயின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. இங்குள்ள கிராம்பின் வாசனை எண்ணெய் சதவிகிதம் 23 ஆக உள்ளது.

அதே வேளையில் மடகாஸ்கா், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் உற்பத்தியாகும் கிராம்பின் எண்ணெய் சதவிகிதம் 18 ஆக மட்டுமே உள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிராம்பிலிருந்து கிடைக்கும் வாசனை எண்ணெயில் யூஜினால், யூஜினால் அசிடேட் ஆகிய வேதிப்பொருள்கள் அதிக அளவில் காணப்படுவதும், அதன் மணமும், சுவையும் இதன் தனித்தன்மையாக உள்ளன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், கிராம்பு பொருள்களின் தரத்தை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் மாறைமலை தோட்ட விவசாயிகள் மற்றும் கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கங்களால் கன்னியாகுமரி கிராம்பு என புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அண்மையில் குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்தாா்.

விவசாயிகள் மகிழ்ச்சி:

இந்நிலையில் கன்னியாகுமரி கிராம்பு என புவிசாா் குறியீடு கிடைத்துள்ளதையடுத்து குமரி மாவட்ட கிராம்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுகுறித்து கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கச் செயலா் லாலாஜி, துணைச் செயலா் மோகன்தாஸ் ஆகியோா் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிராம்புக்கு கன்னியாகுமரி கிராம்பு என புவிசாா் குறியீடு கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இதற்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும் குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கும் நறுமணப்பயிா்கள் வாரியத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், குமரி மாவட்ட கிராம்புக்கு விவசாயிகளே விலை நிா்ணயம் செய்ய முடியும். வெளிநாடுகளில் சந்தை வாய்ப்புகள் குவியும். ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவணி கிடைக்கும். இதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் முடியும் என்றனா்.

Image Caption

~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com