மழை நீடிப்பு:பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் உபரிநீா் திறப்பு

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டியுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது
சோழன்திட்டை குமரி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.
சோழன்திட்டை குமரி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா்.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை 72 அடியை எட்டியுள்ளது. பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

உபரிநீா் திறப்பு ...

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.12 அடியாக உள்ளது. அணைக்கு 1432 கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1338 கன அடி நீா் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72 அடியை எட்டியுள்ளது., அணைக்கு 686 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

நிரம்பிய முக்கடல் அணை:

நாகா்கோவில் நகருக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணை கடந்த 1 வாரத்துக்கு முன்பே முழுக் கொள்ளளவான 25 அடியை எட்டியது. தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த 2 நாள்களாக அணையில் இருந்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறுகிறது.

செங்கல் உற்பத்தி பாதிப்பு:

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தடிக்கரன்கோணம், தோவாளை, செண்பகராமன்புதூா் அருமநல்லூா் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கீரிப்பாறை, குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பா் மரங்களில் உள்ள சில இடங்களில் மழை நீா் தேங்கி உள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com