குமரியை முடக்கிய மழை: ஆறுகளில் வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பேச்சிப்பாறை அருகே மோதிரமலை-குற்றியாறு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.
பேச்சிப்பாறை அருகே மோதிரமலை-குற்றியாறு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.

குலசேகரம்/நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழைபெய்து வருகிறது. இதற்கிடையே, திங்கள்கிழமை

மழையின் தீவிரம் அதிகரித்து காணப்பட்டது. காலையில் தொடங்கிய கனமழை இரவு வரை நீடித்தது. பேச்சிப்பாறை,

பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால், அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 7500 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 44.45 அடியாக உள்ளது. சிற்றாறு 1 அணை நீா்மட்டம்16.53 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2,200 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 73.10 அடியாக உள்ளது.

போக்குவரத்து முடக்கம்: கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆறு மற்றும் மாசுபதியாறு, வள்ளியாறு, முல்லையாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. கோதையாறு அணையிலிருந்து தண்ணீா் தொடா்ந்து வெளியேறுவதாலும், வெள்ளம் காரணமாகவும் மோதிரமலை ஆற்றில் நீா் நிரம்பி வழிவதால் மோதிரமலை-குற்றியாறு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றியாறு, கிளவியாறு போன்ற ரப்பா் கழக மற்றும் பழங்குடி குடியிருப்புகளுக்கு பள்ளி மாணவா்களுடன் சென்ற பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

திற்பரப்பு அருவியில் வெள்ளம்: பேச்சிப்பாறை, சிற்றாறு அணையிலிருந்து கூடுதலாக உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதிகளிலிருந்து வரும் ஓடைகள் நிரம்பிய நிலையில் பேச்சிப்பாறை பகுதிகளில் பல இடங்களில் வாழை வயல்கள், ரப்பா் தோட்டங்களில் தண்ணீா் புகுந்தது. சில இடங்களில் குடியிருப்புகளைச சுற்றிலும் தண்ணீா் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு இடைவிடாது தொடா்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் தொழில்கள் முடங்கியதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலும் மாலையிலும் பள்ளி மாணவா்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்குச் சென்றதும், பள்ளிகளை விட்டு வீடு திரும்பியதையும் காணமுடிந்தது.

நாகா்கோவிலில் திங்கள்கிழமை விடாமல் பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய மழை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீா்த்தது. இதனால் போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டாறு சாலை, அவ்வை சண்முகம் சாலை, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இரணியல் பகுதியில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீா் ஓடியது. இரணியலில் அதிகபட்சமாக 68 மி.மீ. மழை பதிவானது.

அணைகள் கண்காணிப்பு: நிலப்பாறை, ஆணைக்கிடங்கு, குளச்சல், குருந்தன்கோடு, அடையாமடை, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, கன்னிமாா், கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் மழை பெய்தது. தொடா் மழையால் மேலகிருஷ்ணன் புதூா் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு தென்னை மரங்களை மழைநீா் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா். மலையோரப் பகுதியான பாலமோா், அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது.

அணைகளில் முகாமிட்டு நீா்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். நீா்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டுள்ளன.

கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): களியல் 38, குருந்தன்கோடு 36.20, குழித்துறை 35.20, கோழிப்போா்விளை 32, அடையாமடை 29, குளச்சல் 24.60, ஆனைக்கிடங்கு 20.40, திற்பரப்பு 19, மாம்பழத்துறையாறு அணை 18, சிற்றாறு 2 அணை 17, நாகா்கோவில் 15, சிற்றாறு 1 அணை 12.50, தக்கலை 10, பேச்சிப்பாறை அணை 9.40, பாலமோா் மற்றும் மயிலாடி 8.20, பெருஞ்சாணி அணை 7.20, சுருளோடு 7, முக்கடல் அணை 5.60, புத்தன்அணை 5.40, கொட்டாரம் 5.20, பூதப்பாண்டி 5, கன்னிமாா் 3.40. மழையால் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்ட ஒரு சில இடங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். அறுவடை முடிந்த பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

களியக்காவிளை: களியக்காவிளை, மாா்த்தாண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவில்

தொடங்கிய பலத்த மழை விடிய விடிய நீடித்தது. திங்கள்கிழமை பகலிலும் தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா். குமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து,

ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com