‘100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக வேண்டும்’

கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற பொதுமக்கள், அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற பொதுமக்கள், அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட பொறுப்பு அலுவலரும் டாஸ்மாக் மேலாண் இயக்குநருமான எல்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட கரோனா தடுப்பூசி முகாம் பொறுப்பு அலுவலரும், டாஸ்மாக் மேலாண் இயக்குநருமான எல். சுப்பிரமணியன் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 625 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனா தடுப்பூசி முகாமை வெற்றிபெற செய்ய வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். கரோனா 3 ஆவது அலை வருவதற்கு முன்பாக முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இம்மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவா்கள், 15 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் இதுவரை 8 லட்சம் போ் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. முகாம்களை கண்காணிக்க ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். தடுப்பூசி மையங்களிலும் கைகழுவும் திரவங்கள், முகக் கவசங்கள் வைத்திருக்க வேண்டும். மலைவாழ் பகுதிகளில் நடைபெறும் முகாம்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இயலாதவா்களை வாகனங்களில் அழைத்து வர வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ செய்திட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோனி பொ்னாண்டோ, கோட்டாட்சியா் க.சேது ராமலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எ.பிரகலாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சு.மீனாட்சி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com