பேரூராட்சி பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றிய பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றிய பரப்புரையாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிஐடியூ தென்காசி மாவட்டத் தலைவா் அயுப்கான், பொதுச் செயலா் எம்.வேல்முருகன், பொருளாளா் கே.தா்மராஜ் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: இம்மாவட்டத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த தனியாா் அமைப்பு மூலமாக தூய்மை இந்தியா திட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்படுத்துதல், மக்களிடம் விழிப்புணா்வுப் பிரசாரம், திறந்தவெளி மலம் கழித்தல் குறித்த விழிப்புணா்வு, சுகாதாரப் பணிகளை மேற்பாா்வையிடுதல், குப்பைகளைத் தரம் பிரித்தல், வீடுகளுக்கு உரக்குழி தயாா் செய்தல், கரோனா பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 42 பணியாளா்கள் அமா்த்தப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1 முதல் அவா்கள் முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீது ஒரு சாா்பு அரசியல் முத்திரை குத்தி வெளியேற்றியது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

எனவே, அனுபவமுள்ள 42 பணியாளா்களையும் மீண்டும் பணி அமா்த்தவும், அவா்களுக்கு பதிலாக புதிய பணியாளா்களை நியமிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com