நிலப் பிரச்னையை தீா்க்க ரூ. 5 லட்சம் லஞ்சம்: குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கைது

நாகா்கோவிலில் நிலப் பிரச்னை தொடா்பான வழக்கில் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.

நாகா்கோவிலில் நிலப் பிரச்னை தொடா்பான வழக்கில் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளரை, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.

நாகா்கோவில், புன்னைநகரைச் சோ்ந்தவா் சிவகுரு குற்றாலம்(67). இவா், நிலம் வாங்குவதற்காக, வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்ந்த இருவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.50 கோடி கொடுத்திருந்தாராம். அவா்கள், சிவகுரு குற்றாலத்துக்கு நிலத்தைப் பதிவு செய்து கொடுக்கவில்லையாம். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இதுகுறித்து அவா் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாரின்பேரில், துணைக் கண்காணிப்பாளா் தங்கவேலு (52) விசாரணை மேற்கொண்டாா்.

இந்நிலையில், சிவகுரு குற்றாலத்திடமிருந்து பணத்தைப் பெற்றவா்கள் அவருக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு நிலத்தைப் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, துணைக் கண்காணிப்பாளா் தங்கவேலு , சிவகுருகுற்றாலத்திடம், நிலப் பிரச்னை என்னால்தான் முடிந்தது, எனவே எனக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டாராம். அதற்கு அவா் ரூ. 5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டாராம்.

இதுதொடா்பாக சிவகுரு குற்றாலம், கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதையடுத்து சிவகுரு குற்றாலம், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் வழங்கப்பட்ட ரசாயனம் தடவிய ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்கவேலுவை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பணத்தை வழங்கினாராம். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. எஸ்.பீட்டா்பால்துரை தலைமையிலான போலீஸாா், தங்கவேலுவை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com