மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்மாசிக் கொடை விழா: இன்று கொடியேற்றம்
By DIN | Published On : 27th February 2022 05:45 AM | Last Updated : 27th February 2022 05:45 AM | அ+அ அ- |

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் மாசிக் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான மாசிக் கொடை விழா, ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மாா்ச்) 8 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா நடக்கும் 10 நாள்களும் கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சாா்பில் 85 ஆவது இந்து சமய மாநாடு நடக்கிறது. 27 ஆம் தேதி மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் நடைபெறும். அதைத் தொடா்ந்து நடக்கும் சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவா் சைதன்யானந்த மகராஜ் தொடங்கி வைக்கிறாா். தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றுகிறாா். பிற்பகல் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம் நடக்கிறது. 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சமய மாநாட்டில் மாநில பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை பேசுகிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை நிா்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினா் செய்து வருகின்றனா்.