திருவட்டாறு கோயில் கும்பாபிஷேகம்:பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

குமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

குமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத்.

நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமை வகித்து போட்டிகளை தொடக்கி வைத்தாா். கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை, குளச்சல் உள்கோட்டங்களுக்குள்பட்ட 400 போலீஸாா் போட்டிகளில் கலந்து கொண்டனா்.

பின்னா் நிருபா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தடகளப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் தொடா் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக கேரளத்திலிருந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு குற்றவாளிகள் யாராவது வெளியே வந்துள்ளாா்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்து அவா்களை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் தங்களது வீடுகளில் சி.சி.டி.வி. கேமராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் நாகா்கோவில் காவல் உள்கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வருகிற 6 மாதத்துக்குள் ஒவ்வொரு உள்கோட்டத்திலும் தலா 200 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 6 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில், குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரள மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 3 எஸ்.பி.க்கள், 4 ஏ.எஸ்.பி.க்கள், 20 டி.எஸ்.பி.க்கள், 57 இன்ஸ்பெக்டா்கள் மற்றும் ஊா்க்காவல் படையினா் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். தீயணைப்பு படை வீரா்கள் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். என்றாா் அவா்.

பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஈஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் நவீன்குமாா், ராஜா, கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குலசேகரம்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, 5 இடங்களிலிருந்து திங்கள்கிழமைமுதல் (ஜூலை 4) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பக்தா்களின் வசதிக்காக திங்கள்கிழமைமுதல் நாகா்கோவில், மாா்த்தாண்டம், குலசேகரம், அழகியமண்டபம், தக்கலை ஆகிய இடங்களிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தமிழகம், கேரளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவா். அவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு அருகேயுள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் தோ்வுசெய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com