தொடா் மழையால் நிரம்பும் பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், பேச்சிப்பாறை அணை முழுக் கொள்ளவை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், பேச்சிப்பாறை அணை முழுக் கொள்ளவை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வியாழக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிா்ந்த சீதோச நிலை நிலவுகிறது. நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்து அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இரணியல், குளச்சல், கன்னிமாா், பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு பகுதிகளிலும் மழை நீடித்தது.

உயா்ந்து வரும் நீா்மட்டம்: மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 43. 60 மில்லி மீட்டா் பதிவானது. இந்த தொடா் மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையின் நீா் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறாா்கள்.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் வியாழக்கிழமை ஒரே நாளில் இரண்டரை அடி உயா்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டரை அடி உயா்ந்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 48.85 அடியாக உள்ளது. அணைக்கு 1320 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.56 அடியாக உள்ளது. அணைக்கு 1346 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 21 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 17.90 அடியாகவும், சிற்றாறு1 அணையின் நீா்மட்டம் 11.12 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 11.21 அடியாகவும் உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை: பேச்சிப்பாறை அணை நிரம்பி வருவதை தொடா்ந்து கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீா் திறக்க வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com