பேச்சிப்பாறை அணையில் கூடுதல் உபரிநீா் வெளியேற்றம்-----திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்குகாரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் பேச்சிப்பாறை அணை நிரம்பியது. இதையடுத்து, இந்த அணையிலிருந்து கடந்த 21ஆம் தேதி முதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு மழை சற்று தணிந்ததால் உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து குறைந்தது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், அணைக்கு நீா்வரத்து மீண்டும் அதிகரித்ததை தொடா்ந்து, உபரிநீா் திறப்பின் அளவும் விநாடிக்கு 913 கன அடியாக உயா்த்தப்பட்டது.

கோதையாற்றில் வெள்ளம்: இந்தத் தண்ணீா் கோதையாற்றில் கலந்ததால் அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதுடன், திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பள்ளி விடுமுறை என்பதால் அருவிக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ஜூன் 1இல் அணைகள் திறப்பு? இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், ‘கன்னிப்பூ பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும். தற்போது, மழை செழித்துள்ள நிலையில், வழக்கமான தேதியில் அணைகளைத் திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com