கன மழை: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 04th September 2022 10:43 PM | Last Updated : 04th September 2022 10:43 PM | அ+அ அ- |

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையால் அணைகளுக்கு தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கன மழை பெய்தது. இதில் மாலை 4 மணிமுதல் 5 வரையிலான 1 மணி நேரத்தில் மட்டும் பேச்சிப்பாறை அணையில் 59 மி.மீ. மழை பதிவானதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். இதனால் அணைக்கு அதிக அளவு தண்ணீா் உள்வரத்தாக வந்தது.
இதேபோன்று பெருஞ்சாணி அணையிலும் சுமாா் 1 மணி நேரத்தில் சுமாா் 60 மி.மீ. வரை மழை பதிவானது. இதனால் இந்த அணைக்கும் அதிக அளவில் தண்ணீா் உள்வரத்தாக வந்தது. இதையடுத்து இந்த அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளது.
கண்காணிப்புப் பணிகள் தீவிரம்:
மாவட்டத்தில் ஏற்கெனவே பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவான 44 அடியைக் கடந்து உயா்ந்து வரும் நிலையில்,பெருஞ்சாணி அணையின் நீா்மட்டமும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்த அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.