தேங்காய்ப்பட்டினத்தில் விசைப்படகுகளில் தேங்கியுள்ள ரூ. 1 கோடி மீன்களை இறக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதால், முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் திடீரென மூடப்பட்டுள்ளதால், முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தேங்காய்ப்பட்டினத்தில் தூத்தூா், இனயம் மண்டலத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்க வசதியாக மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆனால், இத்துறைமுகம் சரியாக கட்டமைக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துவருகின்றனா். முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டில் சிக்கி படகுகள் கவிழ்ந்து, மீனவா்கள் உயிரிழப்பது தொடா்கதையாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவா்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 11ஆம் தேதி பூத்துறையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சைமன், முகத்துவாரத்தில் சிக்கி உயிரிழந்தாா். அதையடுத்து, மீனவா்கள் 8 நாள்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், கடந்த சில நாள்களுக்கு முன்னா் அவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை (ஆக. 29) இனயம்புத்தன்துறை கடற்கரைக் கிராமத்தைச் சோ்ந்த அமல்ராஜ் (67) என்ஜின் இல்லாத சிறிய வள்ளத்தில் சென்று, மீன்பிடித்துவிட்டுத் திரும்பியபோது வள்ளம் கவிழ்ந்து கடலில் தவறி விழுந்தாா். அடுத்தநாள் அவா் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு வழங்காமல், குளிரூட்டும் பெட்டியில் வைத்து, 1,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குளச்சல் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கராமன், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜேஷ் ஆகியோா் மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக வெளிமாநிலங்களிலிருந்து மீன்பிடித்துவிட்டுத் திரும்புவதற்காக துறைமுகம் வந்த 9 விசைப்படகுகளில் உள்ள மீன்களை இறக்கமுடியாமல் மீனவா்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். இதனால், ரூ. 1 கோடி மதிப்பிலான மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை இறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒருதரப்பு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com