திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்-தமிழக, கேரள போலீஸாா் மரியாதை

சுசீந்திரம் கோயிலிலிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக- கேரள மாநில காவல்துறையினரின் மரியாதையுடன் வியாழக்கிழமை புறப்பட்டாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் கோயிலிலிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் தமிழக- கேரள மாநில காவல்துறையினரின் மரியாதையுடன் வியாழக்கிழமை புறப்பட்டாா்.

தென்திருவிதாங்கூா் தலைநகா் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டபோது, பத்மநாபபுரம் அரண்மனையில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவும் திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாறியது. இதையொட்டி, ஆண்டுதோறும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதிதேவி ஆகிய சாமி திருமேனிகள் திருவனந்தபுரம் சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

நிகழாண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயிலில் அதிகாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் பல்லக்கில் எழுந்தருளியதும் தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, மேள தாளங்களுடன் கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மனுக்கு கேரள, தமிழக போலீஸாா் மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆா்.காந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஞானசேகா், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், பா.ஜ.க. மாவட்டப் பொருளாளா் பி.முத்துராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கோயிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட அம்மன் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது பெண்கள் விளக்கு ஏற்றியும், மலா் தூவியும் அம்மனை வழியனுப்பி வைத்தனா். சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன் ஆசிரமம், கோட்டாறு, பாா்வதிபுரம் வழியாக, மாலையில் பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டசாமி கோயிலை அடைந்தது.

வெள்ளிக்கிழமை ( செப்.23)காலை வேளிமலை குமாரசுவாமி விக்ரகம், பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோயிலை வந்தடையும். பின்னா் அங்கிருந்து கேரள போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் விக்ரகங்கள் பவனி தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com