நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். இதில்,
குடும்பஅட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவா்களின் பெயா் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல்,
முன்னுரிமை குடும்ப அட்டையில் பெண் குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.