விநாயகா் சிலைகளைக் கரைக்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்இந்து அமைப்புகள் கோரிக்கை
By DIN | Published On : 10th September 2023 01:14 AM | Last Updated : 10th September 2023 01:14 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளைக் கரைக்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, இந்து அமைப்பு நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
விநாயகா் சதுா்த்தி விழா இம்மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, இந்து அமைப்பு நிா்வாகிகளுடன் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம் ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், அசோகன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலா் காளியப்பன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சொக்கலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெயராம், இந்து மகா சபா சாா்பில் வெற்றிவேலாயுதப்பெருமாள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
வருவாய்க் கோட்டாட்சியா் பேசியது: விநாயகா் சதுா்த்தி விழாவைப் பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும். சிலைகள் ஊா்வலத்துக்கும், சிலைகளைக் கரைப்பதற்கும் அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை, சங்குத்துறை கடற்கரைகள், பள்ளிகொண்டான் அணை, வெட்டுமணி கடற்கரை, திற்பரப்பு அருவி, தாமிரவருணி ஆறு, மிடாலம், தேங்காய்ப்பட்டினம் கடற்கரை ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் என்றாா் அவா்.
இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் பேசும்போது, சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் வழியில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். சிலைகளைக் கரைக்கும் இடங்களில் போதிய வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்வதுடன், அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனா்.
கூட்டத்தில், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் வினைதீா்த்தான், காவல் ஆய்வாளா்கள் திருமுருகன், கோபி, ராமா், ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளா்கள் சுந்தரமூா்த்தி, மேரிமெகபூபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.