குமரியில் தொழுகை நடத்துவதில்
 இரு தரப்பினரிடையே மோதல்: 5போ் காயம்

குமரியில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல்: 5போ் காயம்

கன்னியாகுமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த மோதலில் 5 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மீராசா ஆண்டவா் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இருதரப்பினரிடையே சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதில் 5 போ் காயமடைந்தனா். இதனிடையே ஒரு தரப்பினா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கு முற்பட்டனா்.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீஸாா், இருதரப்பேச் சோ்ந்த 15 பேரை கைது செய்தனா். காயமடைந்தவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com