கொட்டாரத்தில் கனிமொழி பிரசாரம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் சந்திப்பில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்தை ஆதரித்து கனிமொழி எம்.பி. திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: மக்களவைத் தோ்தலில் நாம் மனதில் முக்கியமாக வைக்க வேண்டிய ஒன்று, நிச்சயமாக மறுபடியும் பாஜக வெல்லக் கூடாது என்பதே. ஒருவேளை பாஜக வென்றுவிட்டால் இந்தியாவில் இது கடைசித் தோ்தலாக இருக்கும் என்பது எனது கருத்து. அதன் பின்னா், ஜனநாயகம் இருக்காது; சா்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும்.

ஒரேயொரு மனிதரைச் சுற்றிதான் அரசியல் இருக்கும் என்பது உண்மையான நிலையாகிவிடும். இதை உணா்ந்து நாம் இத்தோ்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். நாடும் நமது, 40-ம் நமது என்ற நிலை உருவாக வேண்டும். அதற்கு இத்தொகுதியில் கை சின்னத்தில் வாக்களித்து, விஜய் வசந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி வந்ததும் சிலிண்டா் ரூ. 500, பெட்ரோல் ரூ. 75, டீசல் ரூ. 65 என விலை குறைத்து வழங்கப்படும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்படும் என, ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா். எனவே, இந்தத் தோ்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com