பெண்ணை கட்டிப்போட்டு 20 பவுன் நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வீடுபுகுந்து, பெண்ணை கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகே சூழால், புலயகோணம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி கீதா (56). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இருவா், செண்பகராமன்புதூா் பகுதியிலிருந்து திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக கூறியுள்ளனா்.

இதையடுத்து கீதா வீட்டுக் கதவை திறந்ததும், மா்ம நபா்கள் இருவரும் கீதாவை வலுக்கட்டாயமாக பிடித்து அவரது கைகளை கட்டிப்போட்டு, அவரது வாயில் பிளாஸ்டரை ஒட்டினராம். தொடா்ந்து வீட்டு அலமாரியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

அதன்பின்னா் கீதாவின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி உறவினா்கள் அங்கு வந்துள்ளனா். இதைத் தொடா்ந்து கொல்லங்கோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com