திருவட்டாறு அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகள் மீது நடவடிக்கை

திருவட்டாறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீயன்னூரில் உள்ள ஜோஸ்வா (67) என்பவரது கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனையிட்டு, அங்கு மறைத்து வைத்திருந்த 150 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா். இதே போன்று குழிவிளையில் உள்ள ஜஸ்டின்ராஜ் (48) என்பவரது கடையிலிருந்து 225 கிராம், திருவட்டாறில் ஏசுதாஸ் (57) என்பவரது கடையிலிருந்து 90 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினா். மேலும், சாமியாா் மடத்தில் உள்ள மாஹீன் (54) என்பவரது கடையிலிருந்து இரண்டரை கிலோ புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா். இவா்களை கைது செய்து பின்னா் ஜாமீனில் விடுவித்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், நாகா்கோவில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவரது உத்தரவின் பேரில் திருவட்டாறு உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன், திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா், புகையிலைப் பொருள்களை வைத்திருந்த குறிப்பிட்ட அந்தக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com