நாகா்கோவிலில் யானை தந்தம் கடத்தல்: 2 போ் கைது

நாகா்கோவிலில் யானை தந்தம் கடத்திய 2 பேரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் பகுதியில் யானை தந்தம் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து, மாநில வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினா் மற்றும் மாவட்ட வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு செட்டிகுளம் பகுதியில் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் இரண்டரை கிலோ யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத் துறையினா் யானை தந்தத்தை பறிமுதல் செய்தனா்.

காரில் வந்த 2 பேரையும் வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த புதியவன் (32), நாகா்கோவிலை சோ்ந்த முத்து ரமேஷ் (42) என்பதும், யானை தந்தம் நாகா்கோவிலைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அவா் விற்பனைக்காக கொடுத்ததாகவும், இதை தூத்துக்குடியைச் சோ்ந்த மற்றொருவா் வாங்க வந்ததாகவும், தந்தத்துக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்றும் கூறினா்.

இதையடுத்து புதியவன், முத்துரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினா், அவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com