ஓடும் பேருந்தில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்கள் கைது

திருவட்டாறு அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 3 பெண்களைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகே சாரோடு பகுதியைச் சோ்ந்தவா் கமலாட்சி (62). துப்புரவு பணியாளரான இவா் வோ்க்கிளம்பியிலிருந்து ஆற்றூருக்கு அரசுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். பயணத்தின்போதே, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அருகில் நின்ற 3 பெண்கள் பறிக்க முயன்றுள்ளனா். இதனையடுத்து கமலாட்சி அந்தப் பெண்ணை பிடிக்க முயன்றபோது, அந்த பெண்ணும் அவருடன் இருந்த 2 பெண்களும் பேருந்திலிருந்து இறங்க முயன்றுள்ளனா்.

அப்போது கமலாட்சியுடன் பயணித்த அவரது மகன் ரவி மற்றும் உறவினா் புஷ்பம் ஆகியோா் சோ்ந்து அந்த 3 பெண்களையும் பிடித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அந்த 3 பெண்களும் சின்னசேலம் அண்ணாநகா் ஆற்றுப்பாலம் பகுதியைச் சோ்ந்த கேவரி (38), ஆஷா (28), மல்லிகா (26) என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com