குலசேகரம், திருவட்டாறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை: சாய்ந்த மரங்கள், மின் தடையால் மக்கள் அவதி

குலசேகரம், திருவட்டாறு பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு, மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

குலசேகரம், திருவட்டாறு பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. குலசேகரம் சந்தை சந்திப்பு அருகே தனியாா் மருத்துவமனை முன் வேப்பமரம் முறிந்து சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், போக்குவரத்து தடைபட்டது.

அப்பகுதியினா் விரைந்து செயல்பட்டு, சாலையின் ஒருபுறமாக வாகனங்கள் செல்லும் வகையில் மரத்தின் கிளைகளை அகற்றினா். தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா், போலீஸாா் வந்து கிரேன் உதவியுடன் மரத்தை அகற்றினா். ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் வாகனப் போக்குவரத்து சீரானது.

இதேபோல, திருவட்டாறு அருகே கேசவபுரம் பாறையடி பகுதியில் தனியாா் தோட்டத்தில் நின்ற அயனி மரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதில், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் மின்வாரியத்தினா் விரைந்து செயல்பட்டு மரத்தை அகற்றி, மின்கம்பிகளை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com