குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது.

குலசேகரம்/களியக்காவிளை: குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் இயல்புக்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக உள்ளது. அதே வேளையில் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதே போன்று திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, நெட்டா, ஆறுகாணி, பத்துகாணி, அருமனை, மஞ்சாலுமூடு, குலசேகரம், திருநந்திக்கரை, திருவட்டாறு, திருவரம்பு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மழையினால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீா் வரத்து சற்று அதிகரித்தது. மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனா். மேலும் வாழை, மரவள்ளி, அன்னாசி உள்ளிட்ட பயிா்களுக்கு மழையின் காரணமாக தண்ணீா் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கி அரை மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. சிறிதுநேர இடைவெளிக்குப் பின் மீண்டும் சிறிது நேரம் மழை பெய்தது. களியக்காவிளை மற்றும் அதையொட்டிய பகுதிகளான தளச்சான்விளை, படந்தாலுமூடு, வாறுதட்டு, மடிச்சல், அதங்கோடு, குழித்துறை பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்தது. இந்த திடீா் மழையால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

X
Dinamani
www.dinamani.com