களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி சந்திப்பில் மீன் மொத்த விற்பனைச் சந்தை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
மாா்த்தாண்டத்தில் நவீன முறையில் சந்தை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், இங்கு செயல்பட்டு வந்த மீன் மொத்த விற்பனைச் சந்தையை உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்குள்பட்ட சிராயன்குழி அருகே குருவிளைக்காடு பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்க ஒருதரப்பினா் முயற்சி மேற்கொண்டனா். இதற்கு உண்ணாமலைக்கடை, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சிராயன்குழியில் இரு பேரூராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் தொடா் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
4ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்ற போராட்டத்தில், உண்ணாமலைக்கடை பேரூராட்சித் தலைவா் பமலா, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சித் தலைவா் ஜான் டென்சிங், துணைத் தலைவா் சாந்தி, கப்பியறை பேரூராட்சித் தலைவி அனிஷா கிளாடிஸ், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் அமல்ராஜ், தலைவா் வழக்குரைஞா் டதி, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் செல்வக்குமாா், கல்லுக்கூட்டம் பேரூராட்சித் தலைவா் மனோகா்சிங், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, பொதுமக்கள் பங்கேற்றனா்.
பிற்பகலில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இப்பகுதியில் மீன் மொத்த விற்பனைச் சந்தை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினாா். அதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.