குமரி பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுர பணிக்கு மண் பரிசோதனை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக மண் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குமரி பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுர பணிக்கு மண் பரிசோதனை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்காக மண் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பரசுராமரால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்றுபோயிருந்தது.

இந்நிலையில், மீண்டும் அப் பணியை தொடங்குவதற்காக அண்மையில் தேவபிரசன்னம் பாா்த்து, அதன்படி வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோயில் தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் கோயிலின் தல விருட்சமான சந்தன மரம் நடப்பட்டது.

அதைத் தொடா்ந்து கோயில் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 66 அடி நீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டுவதற்கும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைக்கவும் நில அளவீடு செய்யும் பணியும் நடைபெற்றன.

இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் தலைமை ஸ்தபதியும், மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூா்த்தி தலைமையிலான வல்லுநா் குழுவினா், ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை கடந்த நவம்பா் மாதம் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின், ராஜகோபுரத்தின் அளவை உயா்த்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, ராஜகோபுரத் தின் உயரத்தை 120 அடியில் இருந்து 150 அடியாக உயா்த்தவும், 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டது. பின்னா், புதிய ராஜ கோபுரத்துக்கான அளவீடுகளை மறு ஆய்வு செய்து, கட்டடக்கலை நிபுணா் அக்சயா பாலகிருஷ்ணன் தலைமையிலான வல்லுநா்கள் மூலம் ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு ஆலோசனைப்படி, வடக்கு வாசல் மற்றும் கிழக்கு வாசலில் இரட்டை ராஜகோபுரம் கட்டுவது குறித்து 4 இடங்களில் மண் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடக்கு வாசல் பகுதியில் 3 இடங்களிலும், கிழக்கு வாசலில் ஒரு இடத்திலும் துளையிடும் அதிநவீன எந்திரங்கள் மூலம் பூமியை துளையிட்டு மண் பரிசோதனை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் முருகன், முகமது யூனுஸ் மற்றும் தொழில்நுட்ப பணியாளா்கள் 10 போ் இப்பணியை மேற்கொண்டனா்.

மேலும், இதில் சேகரிக்கப்பட்ட மண் துகள்கள் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com