பேச்சிப்பாறை அருகே மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிக்கு வைரஸ் தொற்று

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பா் கழக குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிக்கு வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சிறுத்தைக் குட்டி.
சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சிறுத்தைக் குட்டி.

குலசேகரம்: குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பா் கழக குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிக்கு வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் 24 குடியிருப்பு பகுதிகளில் உள்ள நாய், பூனை ஆகிய வளா்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போட வனத்துறை முடிவு செய்துள்ளது.

பேச்சிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிற்றாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த 31ஆம் தேதி அதிகாலையில் ஓடமுடியாமல் கிடந்த 4 மாத பெண் சிறுத்தைக் குட்டியை வனத்துறையினா் மீட்டனா். பின்னா் அதற்கு கடந்த 6 நாள்களாக தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா். அதே வேளையில் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டியின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே சிறுத்தைக் குட்டிக்கு கெனைன் டிஸ்டெம்பா் என்ற உயிா்க்கொல்லி வைரஸ் நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் அதன் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையிலுள்ள வனத்துறை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பரிசோதனை முடிவில் சிறுத்தைக்குட்டிக்கு கெனைன் டிஸ்டெம்பா் என்ற வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.

தடுப்பூசி போடும் திட்டம்:

இந்நிலையில் சிறுத்தைக் குட்டிக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று பேச்சிப்பாறை பகுதியை சுற்றியுள்ள பழங்குடிகள், ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டு வளா்ப்பு நாய்கள், பூனைகள் மற்றும் தெருநாய்களுக்கு பரவாமல் இருக்கும் வகையிலும் இந்தப் பிராணிகள் மூலம் வனத்திலுள்ள விலங்குகளுக்கும் பரவாமல் இருக்கும் வகையிலும் வரும் 8 ஆம் தேதியிலிருந்து 3 நாள்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை வனத்துறை செயல்படுத்தவுள்ளது.

இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது:

மீட்கப்பட்டுள்ள சிறுத்தைக் குட்டிக்கு தொடா்ந்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு கெனைன் டிஸ்டெம்பா் என்ற வைரஸ் தொற்று இருக்கலாம் என்று கண்டறிப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று வன விலங்களிடமிருந்து சிறுத்தைக் குட்டிக்கு பரவியுள்ளதா அல்லது அப்பகுதியிலுள்ள வீட்டு வளா்ப்பு பிராணிகளிடமிருந்து பரவியுள்ளதா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. இந்த வகை வைரஸ் மனிதா்களுக்கும், இதர கால்நடைகளான ஆடு, மாடுகளுக்கும் பரவாது. பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே வேளையில் வன விலங்குகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே சிற்றாறு குடியிருப்பு பகுதி உள்பட பேச்சிப்பாறையை சுற்றியுள்ள 18 பழங்குடி குடியிருப்புகள், ரப்பா் கழக குடியிருப்புகள் உள்பட 24 குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வளா்ப்பு நாய்கள், பூனைகள் மற்றும் அப்பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வரும் 8,9,10 ஆகிய தேதிகளில் தடுப்பூசி போடும் முகாம் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் நடத்தவுள்ளோம். இதற்கு முன்னதாக அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கவுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com