சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வைகுண்டசாமி தலைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரிப் பதமிட்டு பள்ளியறை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து அய்யாவுக்குப் பணிவிடை, கொடிப்பட்டம் தயாரிப்பு நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தலைமைப்பதி குரு, சுவாமி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து வரும் நாள்களில், பரங்கி நாற்காலி வாகனம், வெள்ளை சாத்தி அலங்காரத்தில் அன்ன வாகனம், பூஞ்சப்பர வாகனம், பச்சை சாத்தி அலங்காரத்தில் அன்ன வாகனம், கற்பக வாகனம், சிவப்பு சாத்தி கருட வாகனங்களில் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

கலிவேட்டை: 8-ஆம் நாள் திருவிழாவான ஜன.26 ஆம் தேதி கலிவேட்டை நடைபெறும். இதையொட்டி மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் நடைபெறும். தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபடுவா். இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வினைத் தொடா்ந்து அன்னதா்மம் நடைபெறும். ஒன்பதாம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ஆம் நாளன்று இந்திர விமான வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.

தேரோட்டம்: 11-ஆம் திருவிழாவான ஜன.29 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். இரவு 12 மணிக்கு காளை வாகன பவனி நடைபெறும். திருவிழா நாள்களில் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குருமாா்கள் சுவாமி, தங்கபாண்டியன், ராஜசேகரன், வழக்குரைஞா்கள் ஆனந்த், அஜித், பொறியாளா் அரவிந்த் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com