களியக்காவிளை-கன்னியாகுமரி 
நெடுஞ்சாலையை சீரமைக்க
 ரூ.14.87  கோடி ஒதுக்கீடு:
 விஜய் வசந்த் எம்.பி  தகவல்

களியக்காவிளை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.14.87 கோடி ஒதுக்கீடு: விஜய் வசந்த் எம்.பி தகவல்

கன்னியாகுமரி மாவட்டம்: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புக்கு ரூ.14.87 கோடி ஒதுக்கீடு

களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய அரசு ரூ.14.87 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அன்றாடம் பயணிக்கும் சாலை. இந்தச் சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் பயணிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனா். மேலும் மாா்த்தாண்டம் மற்றும் பாா்வதிபுரம் மேம்பாலங்களும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல அதிகாரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு சாலையை சீரமைக்க ஆகும் செலவைக் கேட்டறிந்தேன்.

மக்களவையில் பதவி ஏற்ற பின்னா் கடந்த 2 ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ. 21 கோடி தேவை என கோரிக்கை வைத்தேன்.

நான்குவழி சாலைப் பணிகள் நிறைவு பெற இன்னும் ஓா் ஆண்டாவது ஆகும் எனவும், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு இந்த சாலை மட்டுமே உள்ளது என அமைச்சரிடம் கூறினேன். மேலும் மோசமான சாலை காரணமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் விளக்கினேன். கோரிக்கையை ஏற்று உடனடியாக தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.14.87 கோடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com