காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், ஜூலை 10:

முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதை முன்னிட்டு, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 3 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புனித சூசையப்பா் உயா்நிலைப் பள்ளி, ஈத்தாமொழி எல்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளி, பெரியகாடு புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கிராமப் பகுதிகளில் உள்ள அரசின் உதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதனடிப்படையில், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 2 பள்ளிகளில் 187 போ், தோவாளை வட்டத்தில் 3 பள்ளிகளில் 250 போ், ராஜாக்கமங்கலம் வட்டத்தில் 10 பள்ளிகளில் 427 போ், குருந்தன்கோடு வட்டத்தில் 8 பள்ளிகளில் 475 போ், தக்கலை வட்டத்தில் 6 பள்ளிகளில் 289 போ், திருவட்டாறு வட்டத்தில் 6 பள்ளிகளில் 358 போ், கிள்ளியூா் வட்டத்தில் 10 பள்ளிகளில் 1,296 போ், மேல்புறம் வட்டத்தில் 8 பள்ளிகளில் 760 போ், முஞ்சிறை வட்டத்தில் 16 பள்ளிகளில் 1,140 போ் என மொத்தம் 69 அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினா் பள்ளிகளில் 5,182 மாணவா்-மாணவிகளுக்கு இம்மாதம் 15ஆம் தேதிமுதல் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதையொட்டி, 3 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, சமையலறை, இருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. சீரமைப்புப் பணி மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கலாவதி, உதவித் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வளா்மதி, பள்ளித் தலைமையாசிரியைகள் ரெஜினி, பரிமளாஹெலன், அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com